விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி, பேராலி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதன் காரணமாக விருதுநகர் பழைய பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வணிகர்கள் அவதியடைந்தனர்.
மழைநீர் வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதுபோன்ற வெள்ளப்பெருக்குக்கு காரணம் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மழைக்காலங்களில் தொடர்ந்து ஏற்படும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

